Saturday, April 18, 2015

தலைமுறை தாண்டும் ராஜயிசை!

இசை என்னும் இன்பவெள்ளம் நான் கருவில் இருக்கும் போதே என் காதில் பாய்ந்தது என்று சொன்னால் உண்மை அறிந்தவர் என்னை காறிதுப்புவர் :)
ஆனால் இது என் மகனுக்கு நடக்க வேண்டும் என்பது என் ஆசை. அதில் சொற்பமாக என் ஆசை நிறைவேறி விட்டதும் கூட...

விவரம் தெரிந்தும் பல நாட்கள் சென்று தான் எனக்கு தெரிந்தது சிறு வயதில் என் தந்தை ஆடியோ கேசட் கடை வைத்திருந்தது. அதற்காக
அவர் 80களின் இசையை அவ்வளவாக ரசித்தவர் அல்ல/அப்படி வெளிக்காட்டிக்கொண்டதும் இல்லை.
90களின் நடுவில் அவர் சைவமதத்தில் வேரூன்றி செல்ல ஆரம்பித்த பின் முத்துச்சாமி தீட்சிதர் ஆர்மோனியமே இல்லாமல் அரைநாள் தேவராம் பாடினாலும் மனிதர் அசராமல் கேட்பார்.
இவருக்காக இசைஞானி இசையமைத்த திருவாசகப்பாடலை கேட்கவைத்து பல்பு வாங்கியிருக்கிறேன். ஆங்கில கோரஸ் வரும் சமயம் "என்னடா இது அல்லேலூயா பாடல் மாதிரி இருக்குது"னு கேட்டார். :/-
அதோடு முடிந்தது அவருக்கும் எனக்குமான இசை சம்பந்தம்.


அண்ணன்கள் தான் எனக்கு குருமார்கள்.  பெரியண்ணனுக்கு தனி அறை உண்டு. அதில் தாய் மாமா கொடுத்த பிலிப்ஸ் செட் உண்டு. சுதா மியூசிக்கல்ஸ், கீதம் மியூசிக்கல்ஸ் என தேடி தேடி பாட்டு பதிந்து கேட்பான்.
படிக்கும் நேரத்தில் தான் பாட்டு சத்தம் கேட்கும் அவன் அறையில். கேட்டால் பாட்டு கேட்டுட்டே பாடம் படிக்கிறேன் என வித்தை காட்டுவான். :)
அவனது அறையில் அவனே ஒரு அமைப்பை உருவாக்கியிருப்பான் பொறாமை படுத்தும் படி.
மேல் பரங்கின் இரண்டு மூலையிலும் இரண்டு பெரிய பானையை நிறுத்தி வாயில் பெரிய ஸ்பீக்கரை கவுத்தி, அதோடு Chillnessகாக ஸ்பீக்கர்க்கு தோடு போல இரண்டு குட்டி ஸ்பீக்கர் தொங்கவிட்டிருப்பான்.
வேலைக்காக அண்ணன் வெளியூர் சென்றதும் அண்ணனது அறை எனக்கும் சின்ன அண்ணனுக்கும் வந்தது.


இவனது உருட்டு வித்தியாசமாக இருக்கும். இந்த இசையமைப்பாளர், இந்த நடிகர் என்றெல்லாம் பார்க்கமாட்டான். பாடல் வரிகளை ரசிக்க/ திருட கற்றுக்கொடுத்த தீர்க்கதரிசி இவன்.
மதுரை கீஷ்டுகானத்தில் இருந்து ஒருபடப்பாடலாக வாங்கி வந்து கொட்டுவான். இவனது புண்ணியத்தில் தான் ஒரு ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்க கற்றுக்கொண்டேன்.
அதில் முக்கியமானவை 'புது புது அர்த்தங்கள்', 'கும்பக்கரை தங்கையா' ,' நான் பேச நினைப்பதெல்லாம்', 'கரகாட்டக்காரன்',"முதல்மரியாதை".

அடுத்து வந்த கல்லூரி பருவம் காதல் பாடல்களை ஈர்க்கத்தொடங்கியது. யுவனும் ஹாரீஸும் அடித்து ஆடத்தொடங்கிய காலம். "உன் பேரை சொன்னாலே", "ரகசியமாய் .......புன்னகைத்தால்", "சுடும் நிலவு" என
கலவையாக பாடல் கேட்டவனை  ராஜாவை நோக்கி சுண்டி  இழுத்தது "என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட" பாடல். 90களின் பாடல்களை 'SCV' சேனலில் பார்க்கத்தொடங்கி, துரைகோபாலின்
அழகு வர்ணனையோடு சூரியன் எப்.எம்-இல் பாடல்கள் ரசிக்கத்தொடங்கிய காலம், ராஜாவின் பாடல்களை மெய்மறந்து கேட்க துவங்கிய காலம். 

திரை இசைப்பாடல்களில் பின்னனி குரல் என்றால் பாலா, ஜானகியம்மா, ஜேசுதாஸ், சித்ராம்மா என்பதில் இருந்து இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை உணர்த்தியது
கோடைபண்கலை வர்ணனனையும், பின்னால் வந்த இணையமும் தான். ராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா, சசிரேகா, உமாரமணன், அருண்மொழி என  தேடித்தேடி கேட்க ஆரம்பித்த காலம் பொன்னானது.
பின்பு வந்த காலங்கள் இடையிசை,பின்னனியிசை என இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் ; ராஜா என்னும் இசைக்கடவுள் கேட்க கேட்க இன்னமும் அருளிக்கொண்டுதான் இருக்கிறான்.

இதோ அழகு கவிதை பூமியை தொடும் முன்னமே கருவிலே "Nothing But Wind" கேட்க வைத்தது முதல் ..இன்று அவன் தூங்க ராஜாவின் இசையின் 20 தாலட்டு பாடல்கள் மூலமாக  ராஜயிசையை கடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்.
இரவு நேரங்களில் அவனுக்காகவே ரிபீட் மோடில் ஒலிக்கும் பாடல் .....சுசீலாம்மாவின் தேனூறும் குரலில் ராஜாவின் தாலாட்டில் 'வரம் தந்த சாமிக்கு பதமான லாலி' ; அதைக் கேட்டு கொண்டே அவன் தூங்கும் அழகுக்கு
மண்டியிட்டு வணங்கி என் நன்றிகளை தெரிவிப்பேன் ராகதேவனை! நீ இசையில் மட்டுமல்ல கோடான கோடி உள்ளங்களில் ராஜா!




டிஸ்கி: அவனது சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது இது என வசைபாடப்போகும் அன்புகளுக்கு...
அவன் ரகுமான் இசையில் மூழ்கட்டும், அநிருத் இசையில் ஆடட்டும், அவன் தலைமுறை இசையமைப்பாளர் இசையில் திளைக்கட்டும்.
ஆனால் ராஜாவின் இசைமட்டுமே அவன் உள்ளத்தை  தொடும்! 80களின் இசை 2015ல் அசரடிக்கிறது என்றால், 2035 என்ன காலம் கடந்தும் ராஜாவின் இசை ஆளும் இவ்வுலகை _/\_

Monday, August 13, 2012

இதழியல்


   நான் எதை கிறுக்கினாலும்
அதை திருத்தி கவிதையாக்கி
என் மாமனைப்போல வருமா?
எனக்கேட்டு முத்தமிடும்
உன் உதட்டுச்சுருக்கங்களுக்கு
சமர்ப்பணம் இந்த இதழியல்!


 இதமாய் ஆரம்பித்து
ரணமாய் முடிந்து
சுகமாய் வலிக்கிறது
முத்தக்கலவியல்.


இதுபோதும் என தொடங்கி
இப்பொழுது வேண்டாம் என சிணுங்கி
இயல்பாய் வழிகிறது உன் முத்தம்
இன்னும் என்ன என தூண்டி
அருவியாய் இறங்குகிறது என் முத்தம்! 


நிறைய முத்த வகைகள் இருந்தாலும்
எனக்கு தெரிந்தது இவ்விரண்டே!
நீ தருவது குருவி முத்தம்..
நான் தருவது பாம்பு முத்தம்.

எனக்கு
உன் முத்தம் என்பது
உதிர்ந்து கிடக்கும் ஒரு இலையை
கிளையோடு ஒட்டுவதாகும்.
எப்போதும் இணைந்திருக்காவிட்டாலும்
இணைந்திருக்கும் தருவாயே
உயிர் தளிர்த்திருக்கிறது.

Sunday, October 2, 2011

கைப்பேசி என்னும் காதல் கத்தி!



உந்தன் பதில் குருஞ்செய்திக்கான
நொடிகளின் காத்திருப்பில்
மரணத்தை ருசிக்கவைக்கிறாய்..



கிளர்ச்சி என்பது
தீண்டலில் மட்டும் அல்ல
என்பதை புரிய வைத்தது
நீ கொடுத்த முத்தங்களின் 
சத்தங்கள்!


முரடர்களையும் கைபேசி 
முனையில்
முனுமுனுக்க வைக்கின்றது
காதல்!


இரவில் பேசிக்கொண்டே
துங்கிவிடும் நாட்களில்
எனது கனவுகளை 
நீர்த்துபோக செய்கின்றன
உந்தன் இடையில் தவழும்
கைபேசி!



Saturday, August 30, 2008

அழகிய ராட்சசி!

உன் நகங்கள் தான்
எனக்கு நிலா!
உன்னொடு இருக்கையில்
அவைகள் வளர்பிறை..
உன்னொடு நான் இருக்கையில்
அவைகள் தேய்பிறை....



பாட்டி சொன்ன கதையில்
ராட்சசிகள் தான் அதிகம்
நகம் வைத்திருப்பார்களாம்....
அப்படிப்பார்த்தால்
நீதான் எந்தன் அழகிய ராட்சசியடி!

திட்டிக்கொண்டே இருக்கிறாய்...

"நகம் கடிக்கும் பழக்கத்தை
எப்பொழுது விடப்போகிறாய்?" என...
என் கேள்விக்கு பதில் சொல்!
"நகம் வளர்க்கும் பழக்கத்தை
நீ எப்பொழுது விடப்போகிறாய்?"

Wednesday, June 4, 2008

மெளனமொழி......

இலையுதிர் காலம் அது... இல்லை இல்லை என் கல்லூரி மரங்கள்
இலையுதிர்த்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து
கொண்டிருந்தன..... வெள்ளிகிழமையின் மாலைப்பொழுது!


இன்னுமிரண்டு நாட்களுக்கு உன்னை காணமுடியாதே என்றகின்ற
வருத்தங்களோடு கடைசி மேஜையில் கவிதை கிருக்கி
கொண்டிருப்பேன்....இதோ கடைசி வகுப்பு முடிந்ததற்காண
மணியோசையும் கேட்டாகிவிட்டது....

கல்லூரி விடுதியில் தங்கும் நீ விடுமுறைக்கு வீடு திரும்பும் தருணம்
இது! என் வழித்தட பேருந்துகள் வரிசையாக சென்று
கொண்டிருந்தாலும்,துணைக்கு ஒரு நண்பனை பிடித்து வைத்து நீ வரும்
வரை காத்திருப்பேன் சின்னப்பாலம் மேல் அமர்ந்து.உண்மையில் அந்த
பாலம் எனக்கு நண்பனாகிவிட்டது....பலரோடு என்னையும் என் காதலையும் வெகுகாலம் தாங்கியிருந்ததால்!


இனியும் உன்னைக்கான முடியாது என்ற வருத்தங்களுடன் சூரியன்
மறைந்துவிட....வெண்ணிலாவிற்க்கு போட்டியாக சின்ன
களைப்போடு,சிறிய அலங்காரத்தோடு வெளியே வருவாய்.விருப்பமே
இல்லாமல் வழிவிடும் விடுதி கதவுகள்.......





மூன்றாம் வருட இறுதி வரை நீ என்னுடன் பேசியதில்லை
என்றாலும்,உன் கண்கள் என்னுடன் பேசியவை அதிகம்! நான்
காத்திருப்பேன் என்பது தெரிந்தும் ,நான் பார்க்கும் முன் என்னை
தேடிவிட்டு,நான் பார்க்கும் போது என்னை இதுவரை பார்த்ததே
இல்லாதது போல் தலைகுனிந்து கொள்வாய்!


உடனடியாகவா வரவேண்டும் உன் வழித்தட பேருந்து?.. உன் தோழி என்னை காட்டி கிண்டலடிப்பதை பார்த்து அவளை முறைத்துவிட்டு,எதிர் வரும் உன் பேருந்தை பார்ப்பது போல் காத்திருந்ததற்க்கான பரிசாக பார்க்காதது போல் என்னயும் பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாய்!இவ்வளவு நேரம் காத்திருந்ததற்க்கு எதோ சாதித்த உணர்வோடு நானும் வீடு திரும்புவேன்...


நீ விட்டுப்போன வெட்கங்களையும்,பார்வைகளையும் கண்டெடுக்க கடந்த மாதம் நடந்த பட்டமளிப்பு விழாவிற்க்காக கல்லூரிக்கு சென்ற பொழுது,என் தம்பிகளிடம் இடம் கேட்டு அமர்ந்தேன் சின்னப்பாலம் மீது! நான்கு வழிச்சாலை வரும் காரணத்திற்காக சின்னப்பாலம் இடிக்கப்பட போவதாக கேள்விப்பட்டு வருத்தங்களோடு அமர்ந்திருக்கையில்,கவனிக்க முடிந்தது மற்றுமொரு காத்திருத்தலையும்,ஒரு மெளனமொழி உரையாடலையும் எனது இளைய தலைமுறையிடம்!




மெளனத்தைவிட
அழகான மொழி
இருக்க முடியுமா
காதலுக்கு?

Thursday, April 10, 2008

நீ எழுந்து போன பின் (II)

உன்னால் உருவான
உலகம் இது
நீ வந்தால்
மட்டுமே இயங்கும்..


ஆய்வுக்கூடத்தில்
அதிகநேரம்
அமராதே
கணிணிகளும்
கண்ணடிக்கின்றன
கன்னி உன்னைக் கன்டு!





குளத்தங்கரைக்கு
குளிக்க வருகிறாய்
அழுக்கை தின்னும் மீன்கள்
இன்று அழகை தின்ன போகின்றன!




தினமும் தண்ணீர்
எடுக்க ஆற்றங்கரைக்கு
நீ வருவதால்,
வற்றாமல் ஓடுகிறது
என் காதல் நதி!

நீ பேருந்து ஏறி போன
பின்னும் நின்ற் கொண்டே
இருக்கிறது எனக்கான
உன் வெட்கம் மட்டும்..



மருதாணி இலைகளும்
சிவக்கின்றன
உன் விரல்
தீண்டல்களில்!

உன் கொலுசு
சிதறி விட்டு போன சத்தம்
என்னுள் கேட்டுகொண்டே இருக்கிறது
உன் கால்மிதி தடம்
அழியும்வரை..




தையல் படிக்க போகிறாய்
என்றுதான் நினைத்திருந்தேன்
எங்கே படித்தாய்
என் மனதை தைத்து விட்டு போக..





சூரியனை கண்டு
முகம் நிமிரும் சூரியகாந்தி,
உன்னை கண்டதும்
நிமிர்ந்து கொள்கிறது
என் காதல்..


நீ எழுந்து போன பின்
உன் இருக்கையில்
வாடிக்கிடக்கும்
உதிர்ந்த மல்லிகை பூக்கள் சொல்லும்
என் காதலை!



Monday, March 31, 2008

நீ எழுந்து போன பின்.....







அமைதியாய்
என்னைக்கடந்து செல்கிறாய்....
அமர்க்களப்படுகிறது
என் இதயம்.........





தினம் தினம்
அழகை அதிகரித்து கொள்கிறது
நகர பேருந்து
நீ ஏறி வருவதால்..........


தங்கச் சரிகையில்
வெள்ளி நிலா!
ஓணத்து பட்டு புடவையில்
நீ!




சிரிக்கிறயா?
என்னை
சிதறடிக்கிறாயா?



உன் விழி
அம்புகள்
என் இதயத்தில் பாய்ந்தன...
உதிரமாக வழிகிறது
காதல்.......




தேர் உலாவால்
விழா ஊருக்கு.....
தேவதை உன் உலாவால்
திருவிழா எனக்கு...



உன்னை அலங்கரிப்பதாய்
நினைத்து கொள்கிறாய்
உண்மையில் தங்களை
அலங்கரித்து கொள்கின்றன
அணிகலன்கள்..



கோவிலை சுற்றுகிறாய்...
உன்னை சுற்றுகிறேன்...
நோக்கம் இருவருக்கும் ஒன்றுதான்
அம்மன் அருள்!



தூரத்தில் கடக்கும் போதும்
தூரல்களாய் உன் பார்வை
தளிர்க்கிறது என் காதல்..



உன்னோடு பேச
நான் கற்றுக்கொண்ட
ஒரே மொழி
மெளனம்.
சில நேரங்களில்
பார்வைகள்..


கொடி கட்டுவதற்காக
கொல்லையில் வளர்ந்தது
சாதாரன தென்னை தான்.
ஆனால் உன் தாவனி
காய்ந்ததில் காய்த்தது
அனைத்தும் செவ்விளனியே...