Saturday, April 18, 2015

தலைமுறை தாண்டும் ராஜயிசை!

இசை என்னும் இன்பவெள்ளம் நான் கருவில் இருக்கும் போதே என் காதில் பாய்ந்தது என்று சொன்னால் உண்மை அறிந்தவர் என்னை காறிதுப்புவர் :)
ஆனால் இது என் மகனுக்கு நடக்க வேண்டும் என்பது என் ஆசை. அதில் சொற்பமாக என் ஆசை நிறைவேறி விட்டதும் கூட...

விவரம் தெரிந்தும் பல நாட்கள் சென்று தான் எனக்கு தெரிந்தது சிறு வயதில் என் தந்தை ஆடியோ கேசட் கடை வைத்திருந்தது. அதற்காக
அவர் 80களின் இசையை அவ்வளவாக ரசித்தவர் அல்ல/அப்படி வெளிக்காட்டிக்கொண்டதும் இல்லை.
90களின் நடுவில் அவர் சைவமதத்தில் வேரூன்றி செல்ல ஆரம்பித்த பின் முத்துச்சாமி தீட்சிதர் ஆர்மோனியமே இல்லாமல் அரைநாள் தேவராம் பாடினாலும் மனிதர் அசராமல் கேட்பார்.
இவருக்காக இசைஞானி இசையமைத்த திருவாசகப்பாடலை கேட்கவைத்து பல்பு வாங்கியிருக்கிறேன். ஆங்கில கோரஸ் வரும் சமயம் "என்னடா இது அல்லேலூயா பாடல் மாதிரி இருக்குது"னு கேட்டார். :/-
அதோடு முடிந்தது அவருக்கும் எனக்குமான இசை சம்பந்தம்.


அண்ணன்கள் தான் எனக்கு குருமார்கள்.  பெரியண்ணனுக்கு தனி அறை உண்டு. அதில் தாய் மாமா கொடுத்த பிலிப்ஸ் செட் உண்டு. சுதா மியூசிக்கல்ஸ், கீதம் மியூசிக்கல்ஸ் என தேடி தேடி பாட்டு பதிந்து கேட்பான்.
படிக்கும் நேரத்தில் தான் பாட்டு சத்தம் கேட்கும் அவன் அறையில். கேட்டால் பாட்டு கேட்டுட்டே பாடம் படிக்கிறேன் என வித்தை காட்டுவான். :)
அவனது அறையில் அவனே ஒரு அமைப்பை உருவாக்கியிருப்பான் பொறாமை படுத்தும் படி.
மேல் பரங்கின் இரண்டு மூலையிலும் இரண்டு பெரிய பானையை நிறுத்தி வாயில் பெரிய ஸ்பீக்கரை கவுத்தி, அதோடு Chillnessகாக ஸ்பீக்கர்க்கு தோடு போல இரண்டு குட்டி ஸ்பீக்கர் தொங்கவிட்டிருப்பான்.
வேலைக்காக அண்ணன் வெளியூர் சென்றதும் அண்ணனது அறை எனக்கும் சின்ன அண்ணனுக்கும் வந்தது.


இவனது உருட்டு வித்தியாசமாக இருக்கும். இந்த இசையமைப்பாளர், இந்த நடிகர் என்றெல்லாம் பார்க்கமாட்டான். பாடல் வரிகளை ரசிக்க/ திருட கற்றுக்கொடுத்த தீர்க்கதரிசி இவன்.
மதுரை கீஷ்டுகானத்தில் இருந்து ஒருபடப்பாடலாக வாங்கி வந்து கொட்டுவான். இவனது புண்ணியத்தில் தான் ஒரு ஆல்பத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்க கற்றுக்கொண்டேன்.
அதில் முக்கியமானவை 'புது புது அர்த்தங்கள்', 'கும்பக்கரை தங்கையா' ,' நான் பேச நினைப்பதெல்லாம்', 'கரகாட்டக்காரன்',"முதல்மரியாதை".

அடுத்து வந்த கல்லூரி பருவம் காதல் பாடல்களை ஈர்க்கத்தொடங்கியது. யுவனும் ஹாரீஸும் அடித்து ஆடத்தொடங்கிய காலம். "உன் பேரை சொன்னாலே", "ரகசியமாய் .......புன்னகைத்தால்", "சுடும் நிலவு" என
கலவையாக பாடல் கேட்டவனை  ராஜாவை நோக்கி சுண்டி  இழுத்தது "என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட" பாடல். 90களின் பாடல்களை 'SCV' சேனலில் பார்க்கத்தொடங்கி, துரைகோபாலின்
அழகு வர்ணனையோடு சூரியன் எப்.எம்-இல் பாடல்கள் ரசிக்கத்தொடங்கிய காலம், ராஜாவின் பாடல்களை மெய்மறந்து கேட்க துவங்கிய காலம். 

திரை இசைப்பாடல்களில் பின்னனி குரல் என்றால் பாலா, ஜானகியம்மா, ஜேசுதாஸ், சித்ராம்மா என்பதில் இருந்து இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை உணர்த்தியது
கோடைபண்கலை வர்ணனனையும், பின்னால் வந்த இணையமும் தான். ராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன், சுவர்ணலதா, சசிரேகா, உமாரமணன், அருண்மொழி என  தேடித்தேடி கேட்க ஆரம்பித்த காலம் பொன்னானது.
பின்பு வந்த காலங்கள் இடையிசை,பின்னனியிசை என இன்னமும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் ; ராஜா என்னும் இசைக்கடவுள் கேட்க கேட்க இன்னமும் அருளிக்கொண்டுதான் இருக்கிறான்.

இதோ அழகு கவிதை பூமியை தொடும் முன்னமே கருவிலே "Nothing But Wind" கேட்க வைத்தது முதல் ..இன்று அவன் தூங்க ராஜாவின் இசையின் 20 தாலட்டு பாடல்கள் மூலமாக  ராஜயிசையை கடத்திக்கொண்டுதான் இருக்கிறேன்.
இரவு நேரங்களில் அவனுக்காகவே ரிபீட் மோடில் ஒலிக்கும் பாடல் .....சுசீலாம்மாவின் தேனூறும் குரலில் ராஜாவின் தாலாட்டில் 'வரம் தந்த சாமிக்கு பதமான லாலி' ; அதைக் கேட்டு கொண்டே அவன் தூங்கும் அழகுக்கு
மண்டியிட்டு வணங்கி என் நன்றிகளை தெரிவிப்பேன் ராகதேவனை! நீ இசையில் மட்டுமல்ல கோடான கோடி உள்ளங்களில் ராஜா!




டிஸ்கி: அவனது சுதந்திரத்தில் மூக்கை நுழைப்பது இது என வசைபாடப்போகும் அன்புகளுக்கு...
அவன் ரகுமான் இசையில் மூழ்கட்டும், அநிருத் இசையில் ஆடட்டும், அவன் தலைமுறை இசையமைப்பாளர் இசையில் திளைக்கட்டும்.
ஆனால் ராஜாவின் இசைமட்டுமே அவன் உள்ளத்தை  தொடும்! 80களின் இசை 2015ல் அசரடிக்கிறது என்றால், 2035 என்ன காலம் கடந்தும் ராஜாவின் இசை ஆளும் இவ்வுலகை _/\_